உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான மெட்டா, இந்திய அரசுடன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி, மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக இளைஞர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோ திடீரென தளத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ பதிவு நீக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), மெட்டாவின் தலைவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அழைப்பு விடுத்தது. இதனிடையே, மெட்டா தரப்பிடம் விளக்கம் கோரிய நாடாளுமன்றக் குழு, சமூக வலைதள நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், மெட்டா தலைவர் மன்னிப்பு கோரி பதிலளிக்க வேண்டும் என 3 நாட்கள் கெடு விதித்தது. தவறினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் 'Safe Harbour' எனப்படும் சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, மெட்டா தரப்பினர் மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, "தொழில்நுட்பப் பிழை காரணமாக அந்த வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது. பின்னர் உடனடியாக மீண்டும் பதிவேற்றப்பட்டது" என்று தெரிவித்தனர். இதற்கிடையில், மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg இந்திய அரசிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், நிறுவனத்தின் செயல்பாட்டுp பிழைகள் தொடர்பாக மன்னிப்பு கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், இந்த மன்னிப்பு பிரதமரின் வீடியோ விவகாரம் மட்டுமின்றி, டீப் ஃபேக், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கக் கட்டுப்பாட்டு பிரச்னைகளையும் உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.
ஒரு வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட இந்தச் சம்பவம், இந்திய அரசு மற்றும் மெட்டா இடையேயான உறவை மீண்டும் சோதனைக்குள்ளாக்கியுள்ளதுடன் சமூக வலைதளங்களின் பொறுப்புணர்வு, உள்ளடக்கக் கட்டுப்பாடு, வெளிப்படைத் தன்மை மற்றும் டிஜிட்டல் தளங்களின் செயல்பாடு குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர