பண்டிகைக் காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென 140 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியா அணு ஆயுத மிரட்டல்களை கண்டு அஞ்சாது எனக் கூறியதுடன், எதிரிகளின் இடத்திற்கே சென்று தாக்குதலை நடத்தும் எனவும் தெரிவித்தார். 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நிலையை அடைய, சுதேசி இந்தியாவே அதற்கான வழி எனவும் கூறினார். பண்டிகைக் காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் வாங்கும் பொருளின் உற்பத்தியில் இந்தியர் ஒருவரின் வியர்வை இருக்க வேண்டும்; அதில் இந்திய மண்ணின் மணம் வீச வேண்டும் என கூறினார். இந்த பெரும் உதவி இந்தியாவை வளர்ச்சி அடைய வைக்கும், இதற்கு ஒத்துழைப்பு தருமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதம் வரி விதிப்பால் இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே, பிரதமர் சமீபகாலமாக உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி ஊக்குவித்து வருகிறார்.