இந்தியா

ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி! 2 நாள் பயணத்தில் இவர்களையெல்லாம் சந்திக்கிறார்!

ச. முத்துகிருஷ்ணன்

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெர்மனி செல்கிறார்.

48ஆவது ஜி-7 மாநாடு ஜெர்மனியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பை விடுத்திருந்தார். அதன்பேரில் அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜெர்மனி செல்கிறார்.

G7 என்பது பொருளாதார ரீதியாக முன்னேறிய உலகின் ஏழு நாடுகளின் முறைசாரா குழுவாகும். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இதன் உறுப்பு நாடுகள் ஆகும்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்க அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென்னாப்ரிக்காவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு 28ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்கிறார்.

அங்கு வளைகுடா நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவிப்பார் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வாழ்த்துவதற்கு பிரதமர் மோடி இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவார் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.