அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்றும், நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர்களிடம் பிரதமர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வெற்றி, தோல்வி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது என்று பிரதமர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூற வேண்டாம் என கட்சி நிர்வாகிகளிடமும், செய்தித் தொடர்பாளர்களிடமும் பாரதிய ஜனதா மேலிடம் கேட்டுக்கொண்டிருந்தது. மேலும் எம்பிக்கள் தங்களது தொகுதிகளுக்கு சென்று அமைதியை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
அதே போல், தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என ஆர்எஸ்எஸ் அமைப்பும், தங்கள் உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அமைச்சரவைக்கூட்டத்தில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு முன்பு அயோத்தி நிலப் பிரச்னை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது