இந்தியா

தொடரும் 'அக்னிபாத்' போராட்டம் - முப்படை தளபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

ஜா. ஜாக்சன் சிங்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வரும் சூழலில் தரைப்படை, விமானப்படை, கடற்படை தளபதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகின்றன. வழக்கமான ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் இந்த திட்டத்தின் கீழ் சேரும் அக்னி வீரர்களுக்கு கிடைக்காது என்பதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது சொத்துகள் தீயிட்டு கொளுத்தப்படுவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அக்னி வீரர்களுக்கு எதிர்காலத்தில் பல வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளின் தளபதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்படி, முப்படைத் தளபதிகளும் இன்று காலை தனித்தனியாக பிரதமரை சந்திக்கவுள்ளனர். கடற்படை தளபதி ஹரிக்குமார் பிரதமரை முதலில் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது போராட்டங்களின் தற்போதைய நிலவரம், போராட்டம் நடத்தும் இளைஞர்களை சமாதானப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.