இந்தியா

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்: புதிதாக யார், யாரெல்லாம் இடம்பெற வாய்ப்பு?

நிவேதா ஜெகராஜா

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் சுரேஷ் அங்காடி காலமானதால் மத்திய அமைச்சரவையில் காலியிடங்கள் உள்ளன. சிவா சேனா மற்றும் அகாலி தளம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகியதும் காலியிடங்கள் அதிகரித்ததற்கு காரணமாக இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் சில மத்திய அமைச்சர்கள் பல துறைகளின் பொறுப்பை கவனித்து வருகிறார்கள். இதனால் 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை விரைவில் முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றால், அதில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

சென்ற வருடம் காங்கிரஸ் ஆட்சி மத்தியப் பிரதேச மாநிலத்தில் கவிழ்ந்து அங்கே மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. பாரதிய ஜனதா கட்சி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்துள்ள நிலையில், இளம் தலைவர்களுள் ஒருவரான சிந்தியா விரைவில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக முன்னாள் அசாம் முதல்வர் சர்பானந்த சோன்வால் விரைவில் மோடி அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் 2016 ஆம் வருடத்திலேயே சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது, சோன்வால் மத்திய அமைச்சராக இருந்தார். அந்த தேர்தலில் வெற்றிபெற்று, அசாம் மாநிலத்தில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சி அமைந்த சமயத்தில், முதல்வர் பொறுப்புக்கு அவர் தேர்ந்தேடுக்கபட்டதால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வருட அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல்வர் பொறுப்பு ஹேமந்த சர்மா பிஸ்வாலுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த சோனாவால் மீண்டும் மத்திய அமைச்சர் ஆவார் என பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்வராக இருந்தவர் சுஷில் மோடி. பாஜக ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் குமார் தலைமையில் பீகார் மாநிலத்தில் சென்ற வருடம் அரசு அமைக்கப்பட்டபோது, துணை முதல்வர் பதவிக்கு வேறு வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி தேர்ந்தெடுத்தது. இதைத்தொடர்ந்து சுஷில் மோடி நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த தலைவரான அவர் விரைவில் மோடி அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திரா பிரதான் உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்கள் பலர் துறைகளின் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். இப்படி ஒரு சில அமைச்சர்கள் பல துறைகளை கவனிப்பதை விட, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் துறைகளை பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள்.

மத்திய அமைச்சரவையில் தற்போது 59 அமைச்சர்கள் உள்ளார்கள். 81 அமைச்சர்கள் வரை நியமிக்கப்படலாம் என்கிற நிலையில், நரேந்திர மோடி தலைமையில் மேலும் 22 அமைச்சர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தற்போது மோடி அமைச்சரவையில் 21 கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் மற்றும் 38 இணை அமைச்சர்கள் உள்ளார்கள். இணை அமைச்சர்களில் 9 நபர்களுக்கு தங்களுடைய துறையை சுதந்திரமாக கவனிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க இருப்பதால், இந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். ஆகவே, உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த வருண் காந்தி, ரீட்டா பகுகுணா ஜோஷி மற்றும் அப்னா தள் கட்சியை சேர்ந்த அனுப்பிரியா படேல் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக மக்களவைக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற நிலையிலே, இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகள் ஒன்றுக்குக் கூட மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொடரும் என்றும், அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு நாடாளுமன்றத்திலேயே பிரதிநிதித்துவம் இருந்தாலும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு இப்போது இல்லை என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த பல தலைவர்கள் முன்பே முயற்சி செய்தும் ஏமாற்றும் மட்டுமே மிஞ்சியது என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பலமுறை பிரதமர் மோடி, பாஜகவின் தேசியத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி இருந்தாலும் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது நடக்கும் மற்றும் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமை ரகசியமாக காத்து வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்பது இதுவரை தெளிவாக நிலையில், லோக் ஜனசக்தி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதால் அந்தக் கட்சிக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காது என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள்.

- கணபதி சுப்ரமணியம்