இந்தியா

கேள்விகள் கேட்க பயப்படக் கூடாது.. மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

கேள்விகள் கேட்க பயப்படக் கூடாது.. மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

Rasus

கேள்விகள் கேட்க பயப்படக் கூடாது என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

பிரதமர் மோடி தனது 68-ஆவது பிறந்தநாளை நேற்று சிறப்பாக கொண்டாடினார். இதனையொட்டி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி பின்னர் நரூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பள்ளியின் நூலகத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மாணவர்கள் கேள்விகள் கேட்க பயப்படக் கூடாது என்றார். கேள்விகள் கேட்பதே கற்றலின் வழி என தெரிவித்த பிரதமர் மோடி பாடத்தில் என்ன சந்தேகம் ஏற்பட்டாலும் அதனை ஆசிரியர்களிடம் கேள்ளி கேட்டு விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

விளையாட்டின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மாணவர்கள் கட்டாயமாக விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர் மோடி, விளையாட்டே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்றார். அதன்மூலம் உடலை திடகாத்திரத்துடன் வைக்க முடியும் எனவும் கூறினார். தினசரி மைதானத்திற்கு சென்று குறிப்பிட்ட நேரம் விளையாட வேண்டும் என்றும் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதுமட்டுமில்லாமல் பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் நேரம் இது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி அவைகள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உதவும் என்றும் தெரிவித்தார்.