இந்தியா

“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி

webteam

எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, “இன்று நடைபெற்ற விவாதம் மூலம் எதிர்க்கட்சிகளின் எண்ணம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. நாட்டுக்கு வளர்ச்சி வேண்டாம் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். தங்கள் தரப்பின் நியாயத்தை எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாக இதனை கருதுகிறேன். தோல்வியடைந்து விடுவோம் என்று தெரிந்தே எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். அதிகாரப் பசியின் காரணமாகவும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். என்னை பிரதமர் பதவியில் அமரச் செய்தது 125 கோடி மக்கள். இது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை. எதிர்க்கட்சிகளுடைய ஆணவத்தின் வெளிப்பாடு” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்கின்றனர். தான் பிரதமர் ஆகும் கனவை அடைய ராகுல்காந்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார். நிறைய பேர் பிரதமர் ஆக வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் மத்திய அரசுக்கு இருக்கிறது. எல்லோருக்காமன வளர்ச்சிக்காகவே மத்திய அரசு பணியாற்றி வருகிறது. கடந்த 2 வருடங்களில் 5 கோடி மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டிற்கு மேல் வந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை குழப்புகின்றனர். வளர்ச்சியை அவர்கள் நம்பவில்லை. 15 கோடி விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 13 கோடி இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக இருளில் இருந்த 18 ஆயிரம் கிராமங்களுக்கு பாஜக ஆட்சியில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி எதிர்க்கட்சிகளின் கண்ணுக்கு தெரியவில்லை. நாட்டில் யூரியா பற்றாக்குறை என்பதே கிடையாது. பயிர்க்காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். கறுப்புப் பணத்திற்கு எதிராக மத்திய அரசின் போர் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று கூறினார்.