கரீப் கல்யாண் திட்டம் மூலம் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் பாதிப்புக்காக இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதம் முதல் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்றும் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் "கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பொதுமுடக்கத்தின் 2ம் கட்டமான UNLOCK 2.0 தொடங்கிவிட்டது. பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை" என்று கவலை தெரிவித்தார்.
மேலும் "பிறநாடுகளை ஒப்பிடும்போது நாம் கொரோனாவை எதிர்த்து சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம். இதனால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். கரீப் கல்யாண் திட்டம் மூலம் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படும். 5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். பொது முடக்கம் தளர்வுகள் இருந்தாலும் முன்பை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய தவறுகளுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும்" என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
மேலும் தன்னுடைய உரையில் பிரதமர் மோடி "அரசின் விதிமுறையை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நாட்டில் யாரும் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.