பூத்துக் குலுங்கும் மரத்தின் மீது சிங்கம் ஒன்று கம்பீரமாக நிற்கும் படத்தை பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஆப்பிரிக்க மற்றும் ஆசிய சிங்கங்கள் என இருவகை சிங்கங்கள் உலகில் இருக்கின்றன. இதில் ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து இயங்கும் தேஷ் குஜராத் என்ற செய்தி இணையதளத்தின் ட்விட்டர் பக்கத்தில், குஜராத்தின் கிர் காட்டில் உள்ள மரத்தின் மீது சிங்கம் ஒன்று கம்பீரமாக நிற்கும் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.
அந்த புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மரத்தின் மீது சிங்கம் தனியாக நிற்கும் காட்சி காண்பதற்கு அருமையாக இருக்கிறது என கருத்து பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள பாஜக தொண்டர்கள் பலர் நீங்கள் தான் அந்த சிங்கம் என்றும் வரும் தேர்தலை தனியாக எதிர்கொண்டு வெற்றி பெற போகிறீர்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிங்கத்தின் படத்தை ரீ-ட்வீட் செய்திருப்பது அரசியல் அரங்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.