பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களைத் துல்லியமாக அழித்தது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவமும், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கிப் போரைத் தொடங்கியது. இதை இந்தியா வழிமறித்து அழித்தது. இதனால் இருதரப்பிலும் போர் தீவிரமாய் நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அமெரிக்காவின் நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முழுமையாகவும், உடனடியாகவும் சண்டையை நிறுத்த ஒப்புதல் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்மப் தெரிவித்திருந்தார். அதனை இந்திய அரசும் உறுதிசெய்தது.
ஆனால் தாக்குதல் நிறுத்த ஒப்புதலை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான், அதை கடைபிடிக்காமல் மீண்டும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியது. இது இந்தியாவின் கோவத்தை அதிகரித்த நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என இந்தியா பகிரங்கமாக அறிவித்தது. பின்னர் இரண்டு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்தை ஒரேநேரத்தில் கடைபிடித்தனர்.
இந்த சூழலில் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களிடம் இன்று உரையாற்றினார்.
நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “ பாகிஸ்தானின் அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் இனி செல்லாது. பயங்கரவாதிகள் விஷயத்தில் இனி துளியும் சமரசமில்லை, பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது. பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளை வளர்ப்போரை இனி வேறு, வேறாகப் பார்க்க மாட்டோம். இந்த அடி பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கும்தான்.
ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய தொடக்கம், இது தற்காலிக நிறுத்தம்தான், நம்முடைய அனைத்து படைகளும் அவர்களைக் கண்காணிக்கின்றன. இனிமேல் அவர்கள் அத்துமீறினால் முகத்திலேயே குத்துவோம்” என்று பேசினார்.
மேலும், பாகிஸ்தான் நமது எல்லைகளை தாக்கியது. நாம் பாகிஸ்தானின் இதயத்தை தாக்கினோம். அடி தாங்க முடியாமல், பாகிஸ்தானியர்கள் நம்மை தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்தியா அடித்து நொறுக்கியதால், போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டது.
உலகில் எங்கு தீவிரவாதம் நடந்தாலும், அதில் பாகிஸ்தான் முகாம்களுக்கு பங்குண்டு. 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வந்தனர். இன்று பாகிஸ்தான் விரக்தியின் உச்சத்தில் உள்ளது. பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அனைத்தையும் தகர்த்தோம்.
உலக பயங்கரவாதத்தின் தலைமை மையங்கள் தாக்கப்பட்டுள்ளன. தேசத்துக்கே முதலிடம் என்ற கொள்கைபடி, பயங்காவாதிகள் முகாம்களை நொறுக்கினோம். பாரதத்தின் ஏவுகணைகள், ட்ரோன் விமானங்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது.
மகள்களின், தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் அறிந்தது. இந்த பதிலடி பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி.
ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, மக்களின் உணர்வு, மக்களின் வைராக்கியம். மே 7 காலை நமது மன உறுதியின் விளைவை உலகமே பார்த்தது.
பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது. நமது வீரப் படைகளின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன், நாட்டின் படைகளுக்கும், உளவுத் துறைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் தலை வணங்குகிறேன்.
குடும்பத்தினர் கண் முன்னே அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் தாக்குதல் மக்களை கலக்கமடையச் செய்தது. அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு இந்த வீரமான வெற்றியை அர்ப்பணிக்கிறேன்” என்று மோடி உரையில் பேசியுள்ளார்.