ஊழலுக்கு எதிரான யுத்தத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 13 முதலமைச்சர்கள், 6 துணை முதலமைச்சர்கள் 60க்கும் அதிகமான மத்திய அமைச்சர்கள், 1,400 எம்.எல்.ஏக்கள், 337 எம்.பிக்கள், தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் என சுமார் 2000 பேர் பங்கேற்றனர். இதில் நிறைவுரையாற்றிய மோடி, எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சியில் இருந்தபோது அதிகாரம் என்பதை, வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார்.
மத்திய அரசுக்கு எதிராக எந்த குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சிகள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதாக தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான தமது யுத்தத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி எச்சரிக்கை விடுத்தார்.