இந்தியா

கடந்த 20 ஆண்டுகளாக அடைந்துவரும் விரைவான வளர்ச்சி குஜராத்தின் பெருமை - பிரதமர் மோடி

Sinekadhara

கடந்த 20 ஆண்டுகளாக அடைந்துவரும் விரைவான வளர்ச்சி என்பது குஜராத்தின் பெருமை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் குஜராத் மாநிலத்திற்கு செல்வதை பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். இன்று குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்திற்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பின்னர் பேசிய அவர், கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் அடைந்துவரும் விரைவான வளர்ச்சி என்பது மாநிலத்தின் பெருமையாக உள்ளதாகவும், இரண்டு எஞ்சின்கள் இயங்கும் தற்போதைய அரசு வளர்ச்சியினை துரிதப்படுத்தி இருப்பதாகவும் கூறினார். கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் மத்திய அரசு சுகாதாரத்துறையை மேம்படுத்த முழுமையான அணுகுமுறையை கொண்டிருப்பதாகவும், நவீன சிகிச்சை வசதிகள், சிறந்த ஊட்டச்சத்து, சுகாதாரமான வாழ்க்கை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குஜராத்தில் ஆட்சி செய்தபோதும் இவையெல்லாம் மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்பட்டதாகவும் பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி வந்தபொழுது அவருக்கு உள்ளூர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டது.