நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று தெரிந்தது. இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் முழுமையாக தெரிந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பல இடங்களில் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. இதற்கிடையே சூரியகிரகணம் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்தார்.
அதில், ''நாட்டு மக்கள் எல்லோரையும் போல நானும் சூரியக் கிரகணத்தைக் காண ஆர்வமாகவே இருந்தேன். ஆனால் டெல்லியில் மேகமூட்டம் இருந்ததால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை'' என்று தெரிவித்திருந்தார்.
மேலும் 3 புகைப்படங்களையும் அதில் இணைத்திருந்தார். கையில் ஒரு சூரியக்கண்ணாடி வைத்துக்கொண்டு, தன்னுடைய கூலிங் கிளாஸ் மூலம் வானத்தை நிமிர்ந்து பார்க்கும் புகைப்படம், நிபுணர்களுடன் உரையாடும் புகைப்படம், சூரியக் கிரகணத்தை நேரலையில் பார்க்கும் புகைப்படம் என மூன்று புகைப்படங்களை இணைத்திருந்தார்.
அவருடைய ஒரு புகைப்படத்தை பகிர்ந்த ட்விட்டர் பக்கம் ஒன்று 'இது மீமாக மாறுகிறது' என தெரிவித்திருந்தது. உடனடியாக அதனை ரீட்வீட் செய்து பதில் அளித்த பிரதமர் மோடி, ''வரவேற்கிறேன். மகிழ்ச்சியாக இருங்கள்'' என தெரிவித்தார். பிரதமரின் இந்தப் பதிவு பலரது முகத்திலும் புன்முறுவலை ஏற்படுத்தியுள்ளது