விண்வெளி செல்லும் வீரர்கள்
விண்வெளி செல்லும் வீரர்கள் ani
இந்தியா

விண்ணில் பறக்கப் போகும் அந்த 4 வீரர்கள்.. பெயர்களை அறிவித்த பிரதமர் மோடி!

Prakash J

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்கீழ் 2025ஆம் ஆண்டில் 4 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வரப்படுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அந்தவகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு இன்று (பிப்.27) வருகை தந்த பிரதமர் மோடி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர். இவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்றைய விழாவில் இந்த நால்வருக்கும் மிஷன் லோகோவை பிரதமர் மோடி வழங்கினார். கடந்த 6 வருடங்களாக பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களுக்கு இந்த பேட்ஜ்கள் வழங்கப்பட்டன. விண்ணில் பறக்கப்போகும் 4 வீரர்களுக்கும் ரஷியாவில் பல்வேறுகட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிரதமர் மோடி, “இன்று இந்த 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்தான். இந்த நால்வரும் சாதாரண மனிதர்கள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் நான்கு சக்திகள்” எனத் தெரிவித்தார்.