இயற்கையைப் பாதுகாப்பதை மக்கள் கடமையாகச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் மோடி, குஜராத்தில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக நர்மதா மாவட்டம் கல்வானியில் உள்ள சூழலியல் சுற்றுலா மையத்தையும் அங்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள படகுப் போக்குவரத்தையும் தொங்கு பாலத்தில் இருந்தபடியே பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அங்குள்ள வனப் பகுதியை வாகனத்தில் பயணித்தபடியே சுற்றிப்பார்த்தார். அவருடன் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பயணித்தனர்.
இதையடுத்து பட்டாம்பூச்சி பூங்காவுக்குச் சென்ற மோடி, அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டார். பின்னர் சர்தார் சரோவர் அணைக்குச் சென்ற பிரதமர், நர்மதை ஆற்றுக்கு பூஜை செய்து வழிபட்டார். அணையில் நீர் நிரம்பி வழிவதைக் கண்டு ரசித்தார். இதையடுத்து கெவாடியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் மிகப் பெரிய சொத்து இயற்கை என்றும் அதை பாதுகாக்கும் கடமையில் மக்கள் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நாட்டின் பல்வேறு அணைகளில் நிரம்பியுள்ள நீரை சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
பின்னர் தன்னுடைய தாயை சந்தித்த மோடி, அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் தாயுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.