நரேந்திர மோடி பிரதமராகி 11 ஆண்டுகளாகும் நிலையில் முதன்முறையாக நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றார்.
ஆர்எஸ்எஸ் நிறுவனரான ஹெட்கேவர் மற்றும் அந்த அமைப்பின்
2ஆவது தலைவர் கோல்வால்கர் ஆகியோர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியதுடன் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார்.
இதன்பின் பேசிய பிரதமர், என்றும் அழியாத கலாசாரத்துடன் நவீனத்தை நோக்கி நடைபோடும் இந்தியாவின் ஆலமரம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்துரைத்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் 100 ஆண்டு அயராத உழைப்பு 2047இல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் பேசினார்.
வலிமையான வளமான இந்தியாவை உருவாக்க அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அஸ்திவாரத்தை இப்போதே இடவேண்டும் என்றும் பிரதமர் பேசினார்.
பிரதமரின் நாக்பூர் நிகழ்ச்சிகளின்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மஹாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் உடன் இருந்தனர். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமியிலும் பிரதமர் மரியாதை செலுத்தினார்.
புனிதமான தீக்ஷா பூமியில் இருக்கும்போது அம்பேத்கரின் சமூக
நல்லிணக்கம், சமத்துவம், நீதி ஆகிய கொள்கைகளை செயலாக்குவதற்கான புதிய ஆற்றல் கிடைப்பதாக அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் தன் கருத்தை பதிவு செய்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதுதான் அம்பேத்கருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்றும் பிரதமர் அதில் குறிப்பிட்டார்.