இந்தியா

‘ஆதரவற்ற குழந்தைகளின் தாய்’-பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பெண்மணி - யார் இவர்?

ச. முத்துகிருஷ்ணன்

பாகிஸ்தானில் ஆதரவற்ற குழந்தைகளின் தாய் என்று அழைக்கப்படும் மனிதநேய ஆர்வலர் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் ஆதரவற்ற குழந்தைகளின் தாய் என்று அழைக்கப்படும் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பில்கிஸ் ஆகஸ்ட் 14, 1947 இல் இந்தியாவில் குஜராத்தின் பாண்ட்வா பகுதியில் பிறந்தார். பில்கிஸ் தன் இளமைப் பருவத்தில் மக்களுக்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் எதி அறக்கட்டளையில் சேர்ந்தார். பின்னர் தன்னை விட 20 வயது மூத்த, எதி அறக்கட்டளையை நிறுவிய அப்துல் சத்தார் எதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் பில்கிஸ் “தொட்டில் குழந்தை திட்டத்தைத்” தொடங்கினார். அதில் அவர் 300 க்கும் மேற்பட்ட தொட்டில்களை அவர்களின் பல்வேறு மையங்களுக்கு வெளியே வைத்தார். தாய்மார்கள் எந்த கேள்வியும் கேட்காமல் தங்கள் தேவையற்ற குழந்தைகளை அமைதியாக தொட்டிலில் விட்டுவிட அனுமதிக்கப்பட்டனர். அந்த தொட்டிலில் விடப்பட்ட குழந்தைகளுக்கு தாயாக இருந்து வளர்த்தார் பில்கிஸ்.

எதி அறக்கட்டளை பாகிஸ்தானுக்கு தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த இந்தியப் பெண் கீதாவையும் வளர்த்தது. அவள் அறக்கட்டளையின் கராச்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டாள். அந்த பெண் இந்து என்று தெரிந்ததும் பில்கிஸ் தானே அந்த இந்திய பெண்ணுக்கு கீதா என்று பெயரிட்டார். கீதாவை தனது சொந்த வழியில் வழிபட அனுமதிக்கும் வகையில் இந்து தெய்வங்களின் புகைப்படங்களையும் ஏற்பாடு செய்தார். கீதா 2015 இல் இந்தியாவில் தனது தாயுடன் மீண்டும் இணைந்தார்.

கீதா தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்த பிறகு, பில்கிஸ் எதி “இன்று எனக்கு ஈத் (ரம்ஜான்) போன்றது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”என்று கூறினார். பில்கிஸ் எதிக்கு சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது. பில்கிஸ் நுரையீரல் தொற்று, நீரிழிவு மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கபட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பில்கிஸ் எதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி “மனிதாபிமானப் பணிக்கான பில்கிஸ் எதியின் வாழ்நாள் அர்ப்பணிப்பு உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையைத் தொட்டது. இந்தியாவில் உள்ளவர்களும் அவரை அன்புடன் நினைவுகூருகிறார்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.