அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, இருநாடுகள் இடையேயான பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்து மைக்கேல் வால்ட்சுடன் விவாதித்ததாக தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், விண்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தி, சிவில் அணுசக்தி ஆகிய துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார். அப்போது இந்தியா-அமெரிக்கா நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். இதேப் போன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமியும் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.