இந்தியா

“பிரதமர் மோடிதான் ஊழல்களின் தாத்தா” - மம்தா பானர்ஜி காட்டம்

“பிரதமர் மோடிதான் ஊழல்களின் தாத்தா” - மம்தா பானர்ஜி காட்டம்

webteam

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை மசோதாவை திரிணமுல் காங்கரஸ் எதிர்க்கும் என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் குடியுரிமை மசோதாவை நிறைவேற்றியது. அப்போது 
திரிணமுல் காங்கிரஸ் கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தது. இதனையடுத்து தற்போது இந்த மசோதா மாநிலங்கள் அவையில் நிலுவையில் உள்ளது.

இந்தக் குடியுரிமை மசோதா முஸ்லிம் அல்லாத பிறமத மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குகிறது. அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியா வந்த பிற மத மக்களுக்கு குடியுரிமை தருகிறது. அவர்கள் இந்திய குடியுரிமை பெற இந்தியாவிற்கு 31 டிசம்பர் 2014குள் வந்திருக்கவேண்டும். மேலும் அவர்கள் இந்தியாவில் ஆறு ஆண்டுகள் வசித்திருக்கவேண்டும். 

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் தாகூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “குடியுரிமை மசோதா மத துன்புறுத்தலால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நீதி மற்றும் மரியாதையை தருகிறது. இந்தியா சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு தான் சுதந்திரம் பெற்றது. அண்டைய நாடுகளுக்கு பிரிந்து சென்ற மக்கள் அங்கு மத துன்புறுத்தலை சந்தித்தனர். இவர்கள் இந்தியாவைத் தவிர, வேறு எங்கும் செல்ல முடியவில்லை. அதனால் இவர்களுக்குகாகதான் இந்தக் குடியுரிமை மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, திரிணமுல் காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கவேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பிரதமர் மோடிதான் ஊழல்களின் தாத்தா. அவர் இந்தியாவில் உள்ள நீதித்துறை, பத்திரிகைத்துறை ஆகியவற்றை கீழே கொண்டு சென்றுவிட்டார். இதனால் இந்தியாவில் மக்களாட்சி கீழே தள்ளப்பட்டுள்ளது.

நான் இவ்வாறு கூறுவதால் மோடியால் என்ன செய்யமுடியும்? என்னை கொலை செய்துவிடுவார்களா? நான் இதற்காக சிறைக்கு செல்ல கூட தயார். ஆனால் நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன். மேலும் பாஜக அரசுதான் national Register of Citizens (NRC) மூலம் 22 லட்ச வங்காள மொழி மக்களை அசாமிலிருந்து வெளியேற்றியது. 

மத்திய அரசு இந்தக் குடியுரிமை மசோதாவை திரும்ப பெறவேண்டும். இதற்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் ஆதரவு தராது. நாங்கள் இதை கண்டிப்பாக எதிர்ப்போம்” என்று கூறினார்.

அத்துடன் மம்தா பானர்ஜி “பாஜகவில் இருந்த அட்டல் பிகாரி வாஜ்பாய் தான் உண்மையான அரசியல்வாதி. அதனால்தான் அவருக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி மறியாதை தருகிறது. ஆனால் பாஜகவில் தற்போது இருக்கும் தலைவர்கள் அரசியல் செய்ய தகுதியற்றவர்கள். அவர்கள் அனைவரும் பசுவை பாதுகாப்பதற்கும் மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்கும்தான் ஏற்றவர்கள்” என்று கூறியுள்ளார்.