இந்தியா

ஐநாவில் புறநானூற்றுப் பாடலை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு

rajakannan

ஐ.நாவில் புறநானூற்றுப் பாடலை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார். சுகாதார துறையில் இந்திய அரசு மேற்கொண்ட சாதனைகளை பட்டியலிட்ட அவர், 5 ஆண்டுகளில் 11 கோடி கழிவறைகளை நாடு முழுவதும் கட்டியிருப்பதாகவும், இந்தத் திட்டம் ஒட்டுமொத்த உலகுக்கும் உந்துசக்தியாக திகழ்கிறது என்றும் மோடி குறிப்பிட்டார். மேலும், கணியன்பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எனும் புறநாற்றுப் படலையும் ஐ.நா அவையில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார்.

அதில், “உலகம் பல்வேறு நாடுகளாக பிரிந்து இருந்தாலும் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே இனம் தான். மிக மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பாடல் வாயிலாக புலவர் கணியன்பூங்குன்றனார் உலகிற்கு உரைத்துள்ளார்.” என்றார் மோடி.

அத்துடன், பயங்கரவாதம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டுமே சவாலானது அல்ல என்றும், ஒட்டுமொத்த உலகுக்கும், மனித சமூகத்துக்கும் சவாலானது எனவும் அவர் குறிப்பிட்டார். ஆகையால் பயங்கரவாதத்தை வேரறுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைய வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்தார்.

பாகிஸ்தான் குறித்து தனது உரையில் நேரடியாக எந்த இடத்திலும் பிரதமர் குறிப்பிடவில்லை, மாறாக பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் அணி திரள வேண்டும் என கேட்டுக் கொண்டு உரையை முடித்துக் கொண்டார். முன்னதாக, ஐ.நா. தலைமையகத்துக்கு வெளியே காத்திருந்த காஷ்மீர் பண்டிதர்கள், பலுசிஸ்தான் பகுதியினர் உள்ளிட்டோர் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாராட்டி பிரதமர் மோடிக்கு ஆதரவாக உற்சாக குரல் எழுப்பினர்.