செய்தியாளர் - ராஜ்குமார். ர
ஒரு சிறிய பரிசுக்குப் பின்னால் பல நூற்றாண்டு கால வரலாறு ஒளிந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் ஒரு தனித்துவமான கலை அடையாளத்தை உலகுக்கு எடுத்துச் சொல்கின்றன அந்த வகையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார்.
முதலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ராஜஸ்தான் மாநிலம் நாத்வாராவில் உருவாக்கப்படும் Golden Pichwai ஓவியம் பரிசாக வழங்கப்பட்டது. பிச்சுவாய் என்பது பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத் துணி ஓவியக் கலையாகும். பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட துணிகளில் இயற்கைத் தாதுப் பொருட்களால் உருவாக்கப்பட்ட வண்ணங்களையும், தங்க அலங்கார வேலைப்பாடுகளையும் பயன்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன.
அதேபோல், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸுக்கு ராஜஸ்தானின் புகழ்பெற்ற Jaipur Blue Pottery கலைப்பொருள் பரிசளிக்கப்பட்டது. மற்ற மண்பாண்டங்களைப் போலக் களிமண்ணைப் பயன்படுத்தாமல், குவார்ட்ஸ் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரத்யேகக் கலவையால் இவை உருவாக்கப்படுகின்றன. இதனால், இந்தப் பொருட்கள் தனித்துவமான மென்மையான மேற்பரப்பையும் ஒளி ஊடுருவும் தன்மையையும் பெறுகின்றன. ஜப்பான் பிரதமர் சனே தகைச்சிக்கு Royal Blue நிறத்திலான Banarasi Katan Silk Stole வழங்கப்பட்டது. வாரணாசியின் பல நூற்றாண்டுகள் பழமையான நெசவுக் கலையைப் பிரதிபலிக்கும் இந்தப் பட்டுத் துணி, உயர்தர காத்தான் பட்டுநூல்களைக் கொண்டு நெய்யப்படுகிறது. நுணுக்கமான நெசவு வேலைப்பாடுகளும் இதன் தனிச்சிறப்பாகும்.
பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு (Ferdinand Marcos Jr.) காஷ்மீரின் பாரம்பரிய Silk Carpet பரிசாக வழங்கப்பட்டது. கைகளால் முடிச்சுகள் போட்டு உருவாக்கப்படும் இந்தப் பட்டுக் கம்பளங்கள், அவற்றின் மென்மை, பளபளப்பு மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்காகப் புகழ்பெற்றவை. அதேபோல், அவரது மனைவிக்கு இமயமலைப் பகுதியில் காணப்படும் Changthangi இன ஆடுகளின் மென்மையான உட்புற ரோமங்களிலிருந்து பெறப்படும் காஷ்மீர் நாரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட Pashmina Shawl வழங்கப்பட்டது.
இதையடுத்து, மியான்மர் நாட்டின் தலைவருக்கும் புருனே சுல்தான் ஹசனல் போல்கியாவுக்கும் கர்நாடக மாநிலம் பீதரில் உருவாக்கப்படும் Bidriware Silver Inlay Vase பரிசாக வழங்கப்பட்டுள்ளது. துத்தநாகம் மற்றும் தாமிரம் கலந்த உலோகத்தில் வெள்ளியைப் பதித்து உருவாக்கப்படும் இந்தக் கலைப்பொருட்கள், அவற்றின் தனித்துவமான கருப்பு நிறப் பின்னணி மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்காகப் புகழ்பெற்றவை.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுக்கு (Prabowo Subianto) சோழர் கால வெண்கலச் சிற்பம் (Bronze Sculpture) வழங்கப்பட்டது. பாரம்பரியமான Lost-Wax Casting எனப்படும் மெழுகு அச்சு முறையில் இச்சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மனித உடலமைப்பின் துல்லியம், அழகிய வடிவமைப்பு, ஆபரணங்கள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் ஆகியவை சோழர் கால வெண்கலச் சிற்பங்களின் சிறப்புகளாகும். லாவோஸ் நாட்டின் பிரதமருக்கு ரோஸ் குவார்ட்ஸ் கல்லால் செதுக்கப்பட்ட யானைச் சிற்பம் பரிசாக வழங்கப்பட்டது. இயற்கையாகக் கிடைக்கும் இளஞ்சிவப்பு நிற ரோஸ் குவார்ட்ஸ் கல்லைக் கொண்டு உருவாக்கப்படும் இந்தச் சிற்பம், அதன் மென்மையான ஒளிரும் தன்மைக்காகப் புகழ்பெற்றது. மேலும், அதில் தங்க நிறத்திலான நுணுக்கமான அலங்காரங்களும் மலர் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட Urli பரிசளிக்கப்பட்டது. உருளி என்பது இந்தியாவின் பாரம்பரிய அலங்காரப் பாத்திரங்களில் ஒன்றாகும். பொதுவாக, இதில் தண்ணீர் நிரப்பி அதன் மேற்பரப்பில் மலர்களை மிதக்கவிட்டு அலங்கரிப்பது வழக்கம். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு மத்திய இந்தியாவின் கோண்ட் பழங்குடியின மக்களின் பாரம்பரியமான Gond Painting வழங்கப்பட்டது. குறிப்பாக, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் கோண்ட் பழங்குடியின மக்களிடையே இந்த ஓவியக் கலை தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுலுக்கு குஜராத்தின் கட்ச் பகுதியில் உருவாகும் Rogan Art ஓவியம் பரிசளிக்கப்பட்டது. ஆமணக்கு எண்ணெயைக் காய்ச்சி, அதனுடன் இயற்கை நிறமிகளைக் கலந்து பிரத்யேக வண்ணக் கலவை தயாரிக்கப்படுகிறது. இந்தக் கலவையைப் பயன்படுத்தி துணிகளில் கைகளால் நுணுக்கமான வடிவங்கள் வரையப்படுகின்றன. தனித்துவமான இந்த ஓவியக் கலை, கட்ச் பகுதியின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டுக்கு (Hun Manet) பாரம்பரியமான Dokra கலைப்படைப்பில் உருவாக்கப்பட்ட படகு ஒன்றை மோடி பரிசாக வழங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான Lost-Wax Casting எனப்படும் மெழுகு அச்சு முறையில் இந்த உலோகக் கலைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. படகில் பயணிக்கும் மனிதர்கள் மற்றும் பறவைகளின் உருவங்களைக் கொண்ட இந்தப் படைப்பு, ஒற்றுமை மற்றும் கூட்டுச் செயல்பாட்டை எடுத்துரைக்கிறது.
திமோர்-லெஸ்டே நாட்டின் பிரதமர் சனானா குஸ்மாவுக்கு குஜராத் மாநிலம் கம்பாத்தில் உருவாக்கப்படும் Agate Bowl பரிசாக வழங்கப்பட்டது. அகேட் என்பது பல்வேறு இயற்கை வண்ணங்களிலும் பட்டை போன்ற அமைப்புகளிலும் காணப்படும் ஒரு வகைக் கல். இந்தக் கற்களைக் கொண்டு கைவினைஞர்கள் பாத்திரங்களைச் செதுக்கி, மெருகூட்டி உருவாக்குகின்றனர்.
இறுதியாக, வியட்நாம் பிரதமர் லே மின் ஹங்குக்கு பாரம்பரியமான Leather Wall Hanging பரிசளிக்கப்பட்டது. பதப்படுத்தப்பட்ட தோலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த அலங்காரப் பொருட்களில் மலர் வடிவங்கள், வடிவியல் அமைப்புகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றிருக்கும். தோலை மென்மையாக்கிய பின்னர், அதில் துளையிடுதல், புடைப்புச் செதுக்குதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போன்ற நுட்பங்களைக் கொண்டு கைவினைஞர்கள் அழகிய வேலைப்பாடுகளை உருவாக்குகின்றனர்.
இவ்வாறு உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களின் பாரம்பரியக் கலைப்பொருட்களைப் பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார். இவை வெறும் நினைவுப் பரிசுகள் மட்டுமல்ல; ஒவ்வொன்றின் பின்னணியிலும் பல நூற்றாண்டுகள் பழமையான கலை, கலாசாரம் மற்றும் தலைமுறை தலைமுறையாக இந்தக் கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வரும் கலைஞர்களின் உழைப்பு ஆகியவை அடங்கியுள்ளன. இத்தகைய பரிசுகள் மூலம் இந்தியாவின் பாரம்பரியக் கலைகள் சர்வதேச அளவில் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன.