இந்தியா

4வது வந்தே பாரத் ரயில் அறிமுகம்: முந்தைய ரயிலை விட இவ்வளவு கூடுதல் சிறப்பம்சங்களா!!

4வது வந்தே பாரத் ரயில் அறிமுகம்: முந்தைய ரயிலை விட இவ்வளவு கூடுதல் சிறப்பம்சங்களா!!

webteam

இமாச்சல பிரதேசத்தின் உனாவின் அம்ப் அண்டவ்ராவிலிருந்து டெல்லிக்கு இன்று புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளுக்கு வசதியான மற்றும் வேகமான பயணத்தை வழங்கவும் உதவும். உனாவிலிருந்து டெல்லிக்கு பயண நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படும். ஆம்ப் அண்டவ்ராவிலிருந்து டெல்லி வரை இயக்கப்படும், இது நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் 4-வது வந்தே பாரத் ரயிலாகும், மேலும் இது முந்தைய வந்தே பாரத் ரயில்களை விட மேம்பட்டதாகும்.

இது மிகவும் இலகுவான, குறுகிய காலத்தில் அதிக வேகத்தை எட்டும் திறன் கொண்டது. வந்தே பாரத் 2.0 ஆனது 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டுவதுடன், அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். மேலும் மேம்படுத்தப்பட்ட கூடுதல் அம்சங்களை இந்த ரயில் கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முந்தைய பதிப்பான 430 டன்களுடன் ஒப்பிடும் போது 392 டன் எடை கொண்டதாக இருக்கும். இது தேவைக்கேற்ப வைஃபை உள்ளடக்க வசதியையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 32" திரைகள் உள்ளன, இது முந்தைய பதிப்பில் இருந்த 24" உடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு தகவல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

இதில் உள்ள குளிர்சாதன வசதி 15 சதவீதம் அதிக ஆற்றல் திறன் கொண்டதாக இருக்கும். இழுவை மோட்டாரின் தூசி இல்லாத சுத்தமான காற்றுடன், குளிர்ச்சியான, மிகவும் வசதியான பயணமாக இது இருக்கும். முன்பு எக்சிகியூட்டிவ் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒரு பக்க சாய்வு இருக்கை வசதி இப்போது அனைத்து வகுப்புகளுக்கும் கிடைக்கும்.

எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய வடிவமைப்பில், காற்றைச்சுத்திகரிப்பதற்கான புற ஊதா காற்று சுத்திகரிப்பு அமைப்பு கூரைப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு பரிந்துரைத்தபடி, புதிய காற்றில் வரும் கிருமிகள், பாக்டீரியா தொற்றுகள் போன்றவற்றிலிருந்து காற்றை வடிகட்டி சுத்தம் செய்ய இந்த அமைப்பு கூரையின் இரு முனைகளிலும் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 விமானப்பயணம் போன்ற மிகச்சிறந்த அனுபவங்களை பயணிகளுக்கு வழங்குகிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு அமைப்பு-கவச் உள்ளிட்ட மேம்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன.

- விக்னேஷ் முத்து, டெல்லி செய்தியாளர்