இந்தியா

கையில் வைத்திருந்தது என்ன கருவி ? பிரதமர் மோடி விளக்கம்

கையில் வைத்திருந்தது என்ன கருவி ? பிரதமர் மோடி விளக்கம்

jagadeesh

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய பிரதமர் மோடி நேற்றுக் காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, தூய்மை பணியில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இருவரும் நடந்து சென்று பேசியபடியே அங்குள்ள சிற்பங்களை பார்த்து வியந்தனர். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய பிரதமர் மோடி நேற்றுக் காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார்.

பின்னர் இதுபற்றி ட்வீட் செய்த பிரதமர், பொது இடங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள உறுதியேற்போம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டார். அந்த புகைப்படங்களில் பிரதமர் மோடி, தனது  கையில் டம்புள்ஸ் போல ஒரு கருவியை வைத்திருந்தார்.

மோடி கையில் வைத்திருந்த கருவி என்ன என்று பலரும் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார், அதில் " நேற்றிலிருந்து பலரும் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு வருகின்றனர், அது நான் மாமல்லபுர கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கையில் வைத்திருந்த கருவி என்ன என்பதுதான். அந்தப் கருவியின் பெயர் acupressure roller, இது எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது" என கூறியுள்ளார்.