2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க. ஆயத்தமாகும் வகையில், நாடு முழுவதும் உள்ள அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இத்தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் திட்டத்துடன் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை பா.ஜ.க. ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க.வின் தயார் நிலை குறித்தும், அக்கட்சியின் தற்போதைய நிலவரம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய உள்ளார்.
இதற்காக, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி உரையாடவுள்ளதாக, டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தயாரிக்கும் பணியையும் பிரதமர் மோடி மேற்பார்வையிடவுள்ளார்.