இந்தியா

பிரதமர் பதவியின் தகுதிக்கேற்ப மோடி நடந்து கொள்ளவில்லை : ராகுல் விமர்சனம்

webteam

பிரதமர் பதவிக்கு என ஒரு தகுதி இருக்கிறது என்றும் ஆனால் நரேந்‌திர மோடி அதற்கேற்ப நடந்து கொள்ளவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று சுமார் ஒன்றரை மணி நேரம் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் 'டியூப் லைட்' என ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்திருந்தார்‌.

இது குறித்த கேள்விக்கு ராகுல் ‌காந்தி, பிரதமர் பதவிக்கு என ஒரு மேன்மையான தகுதி இருப்பதாகவும் ஆனால் அதற்கேற்ப நரேந்‌திர மோடி நடந்து கொள்ளவில்லை என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்தார்.

இதற்கு முன்னதாக, 6 மாதம்‌ கழித்து ‌நாட்டின் இளைஞர்கள் பிரதமர் மோடியை தடியால் அடிப்பார்கள் என ராகுல் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ம‌க்களவையில் பேசினார். ‌அப்போது விருதுநகர் தொகுதி காங்கிரஸ்‌ எம்.பி மாணிக்கம் தாகூர், அமைச்சர் ஹர்ஷ் வர்தனை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்றார். உடனே அவரை பாரதிய ஜனதா எம்பி ஒருவர் தடுத்து நிறுத்தினார். இதனால் அவையி‌ல் பரபரப்பு நிலவியது.

இதைத் தொ‌டர்ந்து அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்‌, காங்கிரஸ் உறுப்பினர்கள் தன்னை தாக்க முயன்றதாகவும் தன் கையில் இருந்த தாள்களை பறித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரையும் சபாநாயகர் ஓம் பிர்லா தனது அறைக்கு அழைத்து பேசினார்.

இதற்கிடையே, தாக்க வந்ததாக அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதில் உண்மையில்லை என்றும், தன்னைதான் ஆளும் கட்சி எம்பிக்கள் தாக்க முயன்றதாகவும் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் எழுத்து மூலம் புகார் அளித்தார். அதில் சிசிடிவி பதிவை பார்க்குமாறும் சபாநாயகரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.