எல்லையில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் இன்று ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தானும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், இந்திய ராணுவ விமானங்கள் அத்துமீறியது உண்மைதான் என்றும் பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. பயங்கராவதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.