இந்தியா

மும்பையில் 27 பேர் பலி: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

webteam

மும்பை புறநகர் ரயில் நிலையத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மும்பையின் எல்பின்ஸ்டன் ரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்த நேரத்தில் திடீரென்று பலத்த சத்தம் கேட்டது. இதனால் அச்சமுற்ற பயணிகள் ரயில் நிலையத்தை விட்டு முண்டியடித்துக்கொண்டு வெளியேற முயன்றனர். அவர்கள் குறுகிய நடை மேம்பாலத்தில் ஒரே நேரத்தில் சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பலர் கீழே விழுந்து கூச்சலிட்ட நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். 
மும்பையில் புதிதாக 100 புறநகர் ரயில் சேவையை தொடங்கி வைக்க ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் வந்திருந்த போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மின் கசிவால் வெடிச்சத்தம் கேட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில் விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு மகாராஷ்ட்ர அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது