12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கொண்டாட்டமானது, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின்போது, 3 நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். இதுவரை 15 கோடி பேர் வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தை அமாவாசை தினமான இன்று (ஜன.29) ஒரே நாளில் மட்டும் சுமார் 10 கோடி பேர்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகா கும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட சென்ற பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர். அதில் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலை இதுவரை மாநில அரசு தெரிவிக்கவில்லை.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இருப்பினும் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “பிரயாக்ராஜ் மகா கும்பத்தில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக, முதல்வர் யோகி ஜியிடம் பேசியுள்ளேன். மேலும், மாநில அரசுடன் இதுதொடர்பாக தொடர்ந்து தகவல்களை பெற்று வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,
“கும்பமேளாவில் பக்தர்கள் உயிரிழந்ததற்கு நிர்வாகத் திறமையின்மைதான் காரணம்; கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கும்பமேளாவின் மீதமுள்ள நாட்களில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.