இந்தியா

‘மேன் Vs வைல்ட்’  - ஹிந்தி ரகசியம் உடைத்த பிரதமர் மோடி!

webteam

‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியில் ஹிந்தியில் பேசியது குறித்த விளக்கத்தை மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘மேன் Vs வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்தார். 

அந்த நிகழ்ச்சி  பல மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த 12ம் தேதி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி தன்னுடைய கடந்த காலம் குறித்து பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியிலேயே பேசினார். இதனை ஆங்கிலேயரான பியர் கிரில்ஸ் எப்படி புரிந்து கொண்டார் என பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நேற்று மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அதற்கான விளக்கத்தை அளித்தார். 

அதில் ''மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.குறிப்பாக நீங்கள் இந்தியில் பேசியதை அவர் எப்படி புரிந்துகொண்டார்? என பலரும் கேட்டனர். அதில் ரகசியம் ஏதும் இல்லை. பியர் கிரில்ஸ் வயர் இல்லாத சிறிய கருவியை  தனது காதில் பொருத்தி இருந்தார். நான் இந்தியில் பேசப்பேச அந்தக்கருவி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவருக்கு வழங்கியது. இது தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய வரப்பிரசாதம்'' என தெரிவித்துள்ளார்.