இந்தியா

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

webteam

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இதில் பலருக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை எனவும் படுக்கைகள் போதுமான அளவும் இல்லை எனவும் அங்காங்கே புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இதனிடையே வழக்கு ஒன்றில் "நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜன் சப்ளையை செய்யுங்கள்" என மத்திய அரசை காட்டமாக டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து உயர்மட்டக்குழு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அதில் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆக்சிஜனை விமானங்கள் மூலமும் அனுப்ப வழிவகை செய்ய வேண்டும். மாநிலங்களுகு தங்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.