நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொய்வடைந்துள்ள நிலையில் அது குறித்து பிரதமர் மோடி இன்று விரிவான ஆய்வு நடத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள உற்பத்திக் குறைவு மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தை தொடர்ந்து பொருளாதாரத்தை முடுக்கிவிடும் வகையிலான ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
முன்னதாக பல்வேறு தொழில் துறையினருடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்தியிருந்தார். கடந்த நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 6.8% ஆக குறைந்துள்ளது. வாகனத்துறை, ரியல் எஸ்டேட் துறை போன்றவை கடும் சுணக்க நிலையில் உள்ளன. சிறு தொழில் துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் உருவாக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கி ஏற்கனவே கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது