பாஜகவின் ‘அபியாஸ் வர்கா’ கூட்டத்தில் இரண்டாவது நாளாக பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்.
பாஜகவின் அனைத்து எம்.பிக்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக பாஜக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி டெல்லியில் நேற்று மற்றும் இன்று ஆகிய இருநாட்களுக்கு ‘அபியாஸ் வர்கா’ என்ற பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். அத்துடன் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவும் இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். முன்னதாக இந்தக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி எம்பிக்களுக்கு எவ்வாறு பொதுவாழ்வில் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார். அத்துடன் எம்பிக்கள் தங்களின் தொகுதியில் பணியாற்றிய கட்சியினருடன் நல்ல உரையாடலை வைத்து கொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து பாஜகவின் செயல் தலைவர் நட்டா, கட்சியை பலப்படுத்துவது மற்றும் அக்கட்சியின் கொள்கைகள் குறித்து எம்பிக்களுக்கு தெளிவாக விளக்கினார். இதனையடுத்து சில எம்பிக்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில் இன்று இக்கூட்டத்தில் கூட்டு விவாதம் மற்றும் ‘நமோ அப்’ பயன்பாடு குறித்து எம்பிக்களுக்கு விளக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.