இந்தியா

மாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடனுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு

webteam

மாலத்தீவு மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடியை நீண்டகால கடனுதவியாக இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

நவம்பர் 17-ம் தேதி மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக இப்ராஹிம் முகமது சோலிஹ் பதவியேற்றார். இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி இந்தியாவுக்கு வருமாறு இப்ராஹிம் முகமது சோலிஹ்-க்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று 3 நாள் அரசுமுறை பயணமாக  இப்ராஹிம் முகமது சோலிஹ் டெல்லி வந்துள்ளார். குடியரசுத்தலைவர் மாளிகையில் அவருக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து அதிபர் சோலிஹ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இரு நாடுகளுக்கு இடையிலான பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.   

பின்னர் பேசிய பிரதமர் மோடி, ''இந்தியா, மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு அம்சங்கள் ஒன்றோடொன்று இணைந்தவை. எனவே, இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தீவுநாடான மாலத்தீவில் தொழில்களை தொடங்க அதிகமான வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதற்காக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.  மாலத்தீவு மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடியை நீண்டகால கடனுதவியாக இந்தியா வழங்கும்'' என்றும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம், இரு நாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்வழி மற்றும் வான்வழி கண்காணிப்பை பலப்படுத்துவது தொடர்பாக இருநாடுகளும் தீர்மானித்துள்ளன என்று தெரிவித்தார்.