இந்தியா

“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி

“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி

webteam

இந்திய விமானப்படை உலக நாடுகளின் பாராட்டைப் பெற்று வருவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை நரேந்திர மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு இந்திய சீன எல்லையான உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் 7,‌860 அடி உயிரத்தில் உள்ள ஹர்சில் எல்லைப் பகுதியில், இந்திய ராணுவ வீரர்களுடன் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, பாதுகாப்புத்துறையில் இந்தியா முன்னேறி வருவதாகவும், இந்திய விமானப்படை உலக நாடுகளின் பாராட்டைப் பெற்று வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற மோடி, சிறப்பு பூஜையில் பங்கேற்று கேதார்நாத்தை வழிபட்டார். பின்னர் நந்தியை வலம் வந்து வழிப்பட்ட அவர், கோயில் பிரகாரத்தையும் சுற்றிவந்தார். இதையடுத்து கோயில் வாயிலில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தார். பழங்காலம் முதல் தற்போது வரை கேதார்நாத் கோயில் பற்றிய புகைப்படங்கள் அங்கு இடம்பெற்றிருந்தன. குறிப்பாக வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பார்வையிட்டார்.