அன்று டீ விற்றவர் இன்று ஒரு நாட்டின் பிரதமராக உள்ளார் என பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழ்ந்து பேசினார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய ட்ரம்பை ஆரத்தழுவி மோடி வரவேற்றார். பின்னர், கார் வரை சென்று ட்ரம்பை சபர்மதி ஆசிரமத்திற்கு வழியனுப்பி வைத்தார்.
வழிநெடுகிலும் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு வந்த ட்ரம்ப் அங்கு அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றினார்.
நமஸ்தே என தனது உரையை தொடங்கினார் ட்ரம்ப். தனது உண்மையான நண்பர் மோடி என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “டீ விற்பனை செய்பவராக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று நாட்டின் பிரதமராக உள்ளார் மோடி. கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மோடி வாழும் உதாரணம்.
இந்தியாவிற்காக அவர் இரவு பகலாக உழைக்கிறார். மனித குலத்திற்கே நம்பிக்கை அளிக்கிறது இந்தியா. இவ்வளவு பெரிய மைதானத்தில் கூடி எனக்கு வரவேற்பு அளித்ததற்கு நன்றி. உங்களுடைய வரவேற்பால் என்னுடைய களைப்பு நீங்கியது” என தெரிவித்தார்.