இந்தியா

கொரோனா தடுப்பு மருந்துகள் வீணாவதை தடுத்திடுக: முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

webteam

கொரோனா நிலைமை குறித்து பல்வேறு முதல்வர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, "தடுப்பு மருந்து மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும்; தடுப்பு மருந்துகள் வீணாவதை தடுக்க வேண்டும்; சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் 'பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை' ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

கொரோனா நிலைமை குறித்து பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் புதன்கிழமை உரையாடினார். அப்போது அவர் கூறும்போது, "96 சதவீதத்துக்கும் அதிகமான தொற்றாளிகள் இந்தியாவில் குணமடைந்துள்ளனர். உலகத்திலேயே மிகவும் குறைவான இறப்பு விகிதம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் பாதிப்புகள் கவலை அளிக்கிறது. கடந்த சில வாரங்களில் நாட்டில் உள்ள 70 மாவட்டங்களில் 150% எனும் அளவிற்கு பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த இரண்டாவது அலையை உடனடியாக தடுக்க வேண்டும். நாம் இதை இப்போது தடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் பெருந்தொற்று பரவிவிடும்.

கொரோனாவின் இந்த இரண்டாவது அலையைத் தடுப்பதற்காக விரைவானதும், தீர்க்கமானதுமான நடவடிக்கைகள் தேவை. கொரோனாவுக்கு எதிரான நமது போரின் சாதனைகளில் இருந்து கிடைத்துள்ள நம்பிக்கை கவனக்குறைவாக மாறிவிடக்கூடாது.

மக்களை பயப்படுத்தக்கூடாது. அதேசமயம் சிக்கலில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். நமது கடந்தகால அனுபவங்கள் மற்றும் நமது முயற்சிகள் ஆகியவற்றை பயன்படுத்தி திட்டங்களை வகுக்க வேண்டும்.

சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகளின் தேவை. கடந்த ஒரு வருடமாக நாம் செயல்படுத்தி வரும் 'பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை' ஆகியவை குறித்து மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் தொடர்பில் இருந்தவர்களையும் விரைந்து கண்டறிவது மிகவும் முக்கியம். ஆர்டி-பிசிஆர் பரிசோதனை விகிதத்தை 70 சதவீதத்துக்கும் அதிகமாக வைத்திருக்க வேண்டும். துரித ஆன்டிஜன் பரிசோதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களான கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

பரிசோதனைகள் அதிகரிப்பு, பரிந்துரை முறை மற்றும் அவசர ஊர்தி அமைப்பு ஆகியவற்றின் மீது சிறு நகரங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தற்போது பயணங்கள் நடைபெறுகின்றனர்.

ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான புதிய முறை தேவை. அதேபோன்று, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதற்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து மதிப்பிட வேண்டும்.

அதிகரித்து வரும் தடுப்பு மருந்து வழங்குதல் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஒரே நாளில் 30 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டன. அதே சமயம், தடுப்பு மருந்து வீணாவதை தடுக்க வேண்டும்.

தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடுப்பு மருந்து வீணாதல் விகிதம் 10% எனும் அளவிற்கு இருக்கிறது. தடுப்பு மருந்து வீணாவதை தடுப்பதற்காக உள்ளூர் அளவில் உள்ள குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளோடு, முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை உறுதி செய்தல் மற்றும் தூய்மையுடன் இருத்தல் ஆகிய அடிப்படை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தொற்று பரவலை தடுக்க வேண்டும். இது போன்றவற்றில் மந்த நிலை இருக்கக்கூடாது என்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பு மருந்து வழங்கும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தடுப்பு மருந்து காலாவதி தேதி குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும். மருந்துகளின் உதவியோடு நாம் கவனத்துடன் இருக்கவண்டும்" என்றார் பிரதமர் மோடி.