நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், பீகார் மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பா.ஜ.க ஆதரவுடன் இன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் பக்கத்தில் அவர், ’முதல் மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட நிதிஷ் குமாருக்கும் துணை முதல் மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட சுஷில் குமாருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பீகாரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மக்களை நிதிஷ்குமார் ஏமாற்றிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி. பீகார் மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். நிதிஷ்குமார் கடந்த மூன்று நான்கு மாதமாக, பெரும் கூட்டணியை உடைக்க திட்டமிட்டுள்ளார். சுய நன்மைக்காக அவர் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளார். தனிப்பட்ட ஆதாயத்துக்காக, அவர்கள் யாரையும் அணைத்துக்கொள்வார்கள்’ என்று கூறியுள்ளார்.