இந்தியா

கொரோனா எதிரொலி: ரயில்வே பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.50ஆக உயர்வு

webteam

ரயில் நிலையத்திற்கு மக்கள் அதிகம் வருவதை தவிர்க்கும் நோக்கில், நடைமேடை கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.‌ மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 64 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். ஏற்கெனவே கர்நாடகா, டெல்லியில் இருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு 3ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 3 பேரும் 60 வயதை தாண்டியவர்கள் ஆவர்.

மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 39 பேருக்கும், கேரளாவில் 26 பேருக்கும், ஹரியானாவில் 15 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 11 பேருக்கும், டெல்லியில் 8 பேருக்கும், லடாக்கில் 6 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் மாஹேவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் வந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். 14 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயில் நிலையத்திற்கு மக்கள் அதிகம் வருவதை தவிர்க்கும் நோக்கில், நடைமேடை கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு உ‌‌டனடியாக அமலுக்கு வந்துள்ளது. மேலும் இந்த நடைமேடை கட்டண உயர்வு வரும் 31-ஆம் தேதி வரை அது அமலில் இருக்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.