2ஜி வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்ய தாமதம் செய்ததுடன் கூடுதல் அவகாசம் கேட்டதற்காக 15 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் வித்தியாசமான தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
2ஜி வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்நீதிமன்றம், இன்றைய தினம் வித்தியாசமான தண்டனையை அறிவித்துள்ளது. பதில் மனுத் தாக்கல் செய்ய தாமதம் செய்ததுடன் கூடுதல் அவகாசம் கேட்டதற்காக ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவன நிறுவனர் ஷாகித் பல்வா, குசேகான் ஃப்ரூட்ஸ் இயக்குநர் ராஜிவ் அகர்வால் ஆகிய தனி நபர்களுக்கும், DB REALTY, நிஹார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தலா 3 ஆயிரம் மரக் கன்றுகளை தெற்கு டெல்லி பகுதியில் நட வேண்டும் என்றும் இதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரியை இவர்கள் வரும் 15ம் தேதிக்குள் அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை மார்ச் 26ம் தேதி ஒத்திவைத்தனர்.
2ஜி முறைகேடு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையும் சிபிஐயும் வழக்கு தொடர்ந்திருந்தன. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரின் பதிலை நீதிமன்றம் கேட்டிருந்தது.