கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 1 வயதுக் குழந்தை ஆசாம் தனது தாய் மண்ணைத் தொடாமலேயே இறந்தது, அக்குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோழிக்கோடு வெல்லிமடு குன்னூவைச் சேர்ந்த நிஜாஸ் துபாயில் வசிக்கிறார். அங்கேயே, இவரது மனைவி சாஹிராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்வது ஆபத்து என்பதால், கடந்த ஒரு வருடமாக பயணத்தை தவிர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா சூழலாலும் பேரக்குழந்தையை பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தாலும் குழந்தை ஆசாம் முகமதுவை பார்க்கவேண்டும் என்று ஆசையோடு அழைத்துள்ளனர், நிஜாஸின் பெற்றோர். ஆனால், குழந்தை ஆசாமின் முதல் விமானப் பயணமே இறுதிப் பயணமாகியுள்ளது.
மேலும், இந்த விபத்தில் குழந்தையின் தாய் 29 வயதான சாஹிரா பானுவும் இறந்தார். அவர் இறக்கும்போது குழந்தை மடியில் இருந்தது. கடந்த 10 வருடமாக துபாயில் வசித்துவரும் நிஜாஸ் – சாஹிரா தம்பதிகளுக்கு 8 வயதில் இஹான் முகமதுவும், 4 வயதில் மரியம் முஹமது என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களும் விமான விபத்தில் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாஹிரா விபத்துக்குப்பிறகு கொண்டோட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது.