இந்தியா

மாயாவதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பி.ஜே.குரியன்

மாயாவதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பி.ஜே.குரியன்

webteam

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூரில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட விவகாரம் குறித்து, ராஜ்ய சபாவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி 18 ஆம் தேதி பிரச்னை எழுப்பி ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவர், தனது பேச்சை 3 நிமிடத்தில் முடித்துக் கொள்ள வேண்டும் என்று சபையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறினார். உடனே மாயாவதி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர் குரியனை நோக்கி, "எனது சமூகத்தைப் பற்றிய பிரச்னையை நான் எழுப்புகிறபோது ஏன் தடுக்கிறீர்கள்? தலித்துகளுக்கு எதிராக அரங்கேற்றப்படுகிற வன்கொடுமைகளைப் பற்றி நான் பேச அனுமதிக்கப்படாதபோது, ராஜ்யசபாவில் இருக்கிற தார்மீக உரிமை எனக்கு இல்லை" என்றார். பின்னர் கோபமாக வெளியேறிய மாயாவதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த பிரச்னையில் மாயாவதிக்கு உடனே லாலு ஆதரவு தெரிவித்தார். கூடுதலாக, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய கவலையை தெரிவித்தார். இந்நிலையில், நேற்று ராஜ்யசபா கூடியதும் பி.ஜே.குரியன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், “ஏதோ தவறு நடந்துவிட்டது. பேச்சை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போனதே இந்த பிரச்னைக்கு காரணமாகிவிட்டது. மாயாவதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டார்.