இந்தியா

அவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா கேட்கும் பொதுமக்கள் - வருந்தும் போலீசார்!

அவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா கேட்கும் பொதுமக்கள் - வருந்தும் போலீசார்!

webteam

அவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா போன்ற உணவுகளை பொதுமக்கள் கேட்பதாக டெல்லி ரயில்வே போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்

ரயில் பயணத்தின் போது ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டாலோ அல்லது அவசர உதவிக்கோ பொதுமக்கள் போலீசாரை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். அதற்காக 1512 என்ற அவசர எண்ணை போலீசார் அறிவித்துள்ளனர். ஆனால் அந்த அவசர எண்ணை தொடர்புகொள்ளும் பொதுமக்கள், பீட்சா வேண்டும், செல்போன் ரீசார்ஜ் செய்ய வேண்டும் போன்ற தேவைகளை கேட்பதாக போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஒருநாளைக்கு சுமாராக 200க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், அதில் 80 சதவீதத்தினர் பீட்சா போன்ற உணவுகள் கேட்டும், செல்போன் ரீசார்ஜ் செய்யக்கோரியும் உதவிகள் கேட்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் ஒருவர் கூறுகையில், ''அவசர எண்ணுக்கு அழைக்கும் பலர் எனக்கு பர்கர் வேண்டும், டீ வேண்டும், ஜூஸ் வேண்டும், தண்ணீர் வேண்டுமென கேட்கிறார்கள். சிலர் செல்போன் ரீசார்ச் செய்ய வேண்டுமென கேட்கிறார்கள். பொதுமக்களுக்கு அவசர எண் தொடர்பான விழிப்புணர்வு இல்லை.

24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போலீசாருக்கு தொல்லையாக உள்ளது. சிலர் ரயில் நிலையம் வர காலதாமதம் ஆகிறது என்பதால் ரயிலை நிறுத்துங்கள் என்றுக்கூட அவசர எண்ணுக்கு அழைத்துச் சொல்கின்றனர்'' என தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில் பயணத்தின் போது சிரமம், குற்றம், கொள்ளை போன்ற அவசர தேவைக்கு மட்டுமே அவசர எண்ணை பொதுமக்கள் அழைக்க வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.