இந்தியா

அவையை முடக்குவதிலேயே குறியாக இருந்தனர் - பியுஷ் கோயல்

Sinekadhara

எதிர்க்கட்சிகள் நடத்திய உச்சகட்ட அராஜகம் காரணமாகவே நாடாளுமன்ற கூட்டத்தை முன்னதாகவே முடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டதாக பியுஷ் கோயல், அனுராக் தாகூர் உள்ளிட்ட மத்தியமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பெகாஸஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் 16 நாட்களாக முடங்கிப் போனது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர். இதனைக் காரணமாக கொண்டு திட்டமிட்டப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கூட்டத் தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகளின் செயலால் நாடாளுமன்றத்தின் புனிதம் சிதைக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா கருத்து தெரிவித்தார். முன்னதாக கடைசி நாளில் எந்த விவாதமுமின்றி மக்களவையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தங்களின் எந்த ஆலோசனையும் கேட்காமல் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்ற கூட்டத் தொடரை முடித்துக் கொண்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தன. நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் முழக்கம் எழுப்பி பேரணியை தொடக்கிய அவர்கள் விஜய் சோக் பகுதியில் நிறைவு செய்தனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் நடத்திய உச்சகட்ட அராஜகம் காரணமாகவே நாடாளுமன்ற கூட்டத்தை முன்னதாகவே முடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டதாக பியுஷ் கோயல், அனுராக் தாகூர் உள்ளிட்ட மத்தியமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் பேரணியை தமிழக பாரதிய ஜனதாவும் விமர்சித்துள்ளது.