உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் வாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் கான்பூர் தொகுதி எம்.எல்.ஏ பிரனவ் சாம்பியன். பல சர்ச்சைகளுக்கு பேர் போனவரான இவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது இவர் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் எம்.எல்.ஏ மற்றும் அவரின் நண்பர்கள் மது அருந்திவிட்டு நடனம் ஆடுகின்றனர்.
அத்துடன் தனது இரு கைகளில் துப்பாக்கியை வைத்து நடனமாடும் பிரனவ், ஒரு கட்டத்திற்குமேல் வாயில் துப்பாக்கியை கவ்விக்கொண்டு ஆட்டம் போடுகிறார். மேலும் போதையில் அவரது நண்பர்களுடன் பிரனவ் கெட்ட வார்த்தைகளை மிக சரளமாக பேசுகிறார். அதுவும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதனையடுத்து உத்தரகாண்ட் காவல்துறையினர் இந்த வீடியோ குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் எம்.எல்.ஏ வைத்திருக்கும் துப்பாக்கிக்கு உரிய ஆவணம் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பிரனவ் பத்திரிகையாளர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கொடுத்த புகாரை அடுத்து இவரை பாஜக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மூன்று மாதங்களுக்கு நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.