ஜே.என்.யூவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நேற்று முன் தினம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கியமான நகரங்களில் ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஜே.என்.யூவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் ஜே.என்.யூவில் நடப்பதாக ஹிந்து ரக்ஷா தளத்தின் பிங்கி சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார். அதனால்தான் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை கூறுகையில், ஹிந்து ரக்ஷா தளம் அமைப்பினர்தான் தாக்குதல் நடத்தினார்களா என விசாரணை நடைபெற்று வருவதாகவும் வீடியோ பதிவில் உள்ள முகமூடி நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.