மகாராஷ்டிரா அமைச்சரவையில், பாஜகவைச் சேர்ந்த நிதேஷ் ரானே மீன்வளத்துறை அமைச்சராக அங்கம் வகிக்கிறார். இவர், ‘கேரளாவை மினி பாகிஸ்தான்’ எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதேஷ் ரானே, "பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலத்தான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர். கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான். அதனால்தான் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். அனைத்து பயங்கரவாதிகளும் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இதுதான் உண்மை” என்று தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் எதிர்ப்பும் கிளம்பியது.
இதையடுத்து அந்தக் கருத்து தொடர்பாக விளக்கமளித்த அவர், “பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைப்போல் இந்தியாவில் நடந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். லவ் ஜிகாத் வழக்குகளில் இந்து பாகிஸ்தானில் உள்ள சூழ்நிலையை கேரளாவில் நான் ஒப்பிட்டுப் பார்த்து எனது உரையில் சொல்ல முயன்றேன். நான் உண்மையை மட்டுமே தெரிவித்தேன். 12 ஆயிரம் இந்துப் பெண்கள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுவதைத் தடுத்து அவர்களுக்கு உதவிய ஒரு நபரிடம் தாம் இருந்தேன். வயநாடு தொகுதியில் ராகுலும் பிரியங்காவும் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாலேயே வெற்றிபெற்றனர்” என விளக்கமளித்தார்.
இந்த நிலையில் நிதேஷ் ரானாவின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கேரளாவை மினி-பாகிஸ்தான் என முத்திரை குத்தி மகாராஷ்டிரா மீன்வளம் மற்றும் துறைமுக அமைச்சர் நிதேஷ் ரானா இழிவுபடுத்தும் கருத்து, மிகவும் தீங்கிழைக்கும் மற்றும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற பேச்சுக்கள், மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் கோட்டையான கேரளாவுக்கு எதிராக சங்பரிவார் நடத்தும் வெறுப்பு பிரசாரங்களை பிரதிபலிக்கிறது. கேரளா மீதான இந்த மோசமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும் இந்த சங்பரிவாரின் வெறுப்புப் பிரசாரத்திற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே, ஷரத் பவார் தலைமையிலான என்சிபி (எஸ்பி) செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஷரத் பவார் தலைமையிலான என்சிபி (எஸ்பி) செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ, "நிதேஷ் ரானே எப்போதும் இப்படித்தான் பேசுவார். பாஜக இந்த அறிக்கைகளுக்கு உடன்படுகிறதா என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும். கேரள மக்களுக்கு பாஜக பதிலளிக்க வேண்டும். இந்தியாவை அவமானப்படுத்துவது போன்ற கருத்துகள் மனதில் இருந்து வரக்கூடியவை” எனத் தெரிவித்திருந்தார்.