கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆளும் இடதுசாரி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், மறுநாளான திங்கள்கிழமையே பதவியேற்பு விழாவை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, பிந்தைய கருத்துக் கணிப்பிலும் சரி, கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணியே ஆட்சியை தக்கவைக்கும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இச்சூழலில், கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆளும் இடதுசாரிக் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், மறுநாளான திங்கள்கிழமையே பதவியேற்பு விழாவை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவிவரும் நிலையில், மாநிலத்தில் உடனடியாக அரசுப் பொறுப்பேற்றுக் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மறுநாளே பதவியேற்றுக் கொள்ளும் வகையில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தலைமைச் செயலக உயரதிகாரிகளுக்கு பினராயி விஜயன் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் முதலமைச்சர் மட்டுமோ அல்லது அவருடன் 3 அல்லது 4 மூத்த அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றுக் கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.