துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி இராண்டாக உடைந்தது. இதில் ஒரு குழந்தை, விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவல் அறிக்கையில் விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியும், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடலைப் பதிவு செய்த CVR கருவியும்
தற்போது கண்டறியப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதிற்கு கேரளாவில் உள்ள டேபிள் டாப் விமானத் தளமே முக்கிய காரணமாகவும், பருவநிலை மாறுபாடுகள் இதரக் காரணங்களாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்துக் குறித்தும் டேபிள் டாப் விமானத்தளம் குறித்தும் தெரிந்து கொள்ள விமானத்துறை அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
அவர் கூறியதாவது “ டேபிள் டாப் விமானத்தளம் ஒன்றே இந்தக் கோர விபத்துக்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது. இது போன்ற விமானத்தளங்கள் உலக அளவில் இருக்கிறது. டேபிள் டாப் தளம் என்பது மற்ற விமானத்தளங்கள் போல் அல்லாமல் ஒரு டேபிள் போன்ற வடிவில் இருக்கும்.அதனால் இது போன்ற விமானத்தளங்களில் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு தொழில்துறைச் சார்ந்த அறிவும், அனுபவமும் அதிகம் தேவை. கோழிக்கூட்டில் நடந்த விபத்தை பொறுத்தவரை விமானத்தை இயக்கிய விமானிகளுள் ஒருவர் 20 வருடத்திற்கு மேலான அனுபவம் கொண்டவர் எனக் கேள்விப்பட்டேன். மேலும் இந்த விபத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தை 1 ஆவது ஓடுதளத்தில் இறங்க சமிக்கை வந்ததாகவும், ஆனால் விமானி 2 ஓடுதளத்தில் விமானத்தை இயக்கியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு மங்களூரில் விமான விபத்து நடந்த அடுத்த ஆண்டு கோழிக்கூட்டில் உள்ள விமான நிலையத்தை சீரமைக்க கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அந்தக் கடிதம் புறக்கணிக்கப்பட்டது. அதிகாரிகள் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கோழிக்கூட்டில் உள்ள விமான ஓடு தளத்தின் இறுதிப்பகுதியில் போதுமான இடம் கிடையாது. அந்த இடம் இல்லாததால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், கொஞ்சம் ஆசுவாசப்பட கூட அங்கு நேரமில்லை. அந்த அவசரத் தேவைக்கான இடம் இருந்திருந்தால் ஒரு வேளை விமானி விபத்தை தவிர்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம் விமானத்தை அந்தரத்தில் கட்டுப்படுத்துவதை விட, தரையில் கட்டுப்படுத்துவது என்பது எளிதான ஒன்று.
இது மட்டுமன்றி விமான தரைத்தளத்தின் இறுதிப் பகுதிக்கு அடுத்ததாகவே ஒரு குழி ஒன்று உள்ளது. அதனால் விமான விபத்து நடந்ததற்கு அரசிற்கும், விமானத்துறைக்கும் பெரும் பங்குண்டு. எதுவாக இருந்தாலும் CVR கருவியில் உள்ள விமானிகளுக்கு இடையேயான உரையாடல்களும், அதன் பின் நடக்கும் விசாரணையும் உண்மைச் சம்பத்தை வெளிக்கொண்டு வரும் எனத் தெரிகிறது.
இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் விமானி சாதுர்யமாக விமானத்தில் இருந்த எரிப்பொருளை முழுவதுமாக தீர்த்திருக்கிறார். இது மட்டுமன்றி விமானத்தின் இன்ஜினையும் அணைத்துள்ளார். விமானியின் இந்த சாதூர்யமான நடவடிக்கையால் விமான வெடிக்காமல் இரண்டாக பிளந்தது. ஒரு வேளை விமானி இதை செய்யாமல் இருந்திருந்தால் விமானம் வெடித்து 100 க்கு மேல் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கும்.
- கல்யாணி பாண்டியன்