இந்தியா

ஜே.என்.யூ வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு

webteam

ஜே.என்.யூ வன்முறையில் இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் ஆய்ஷி கோஷுக்கும் ‌தொடர்பு இருப்பதாக கூறியுள்ள டெல்லி காவல்துறை அதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தான் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக ஆய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 5ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் முகமூடி அணிந்து நுழைந்து கும்பல் ஒன்று நடத்திய கொடூர தாக்குதலில் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இடதுசாரி மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தின் குதித்தனர்.


மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். சம்பவம் நடந்து ஐந்து நாட்களான பிறகும் இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாக ஒன்பது பேரின் பெயரை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் மாணவர் சங்க தலைவர் ஆய்ஷி கோஷ் உள்பட ஏழு இடதுசாரி மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆய்ஷி கோஷ் உள்ளிட்ட மாணவர்கள் சேர்ந்து கொண்டு ஜே.என்.யூ. பெரியார் விடுதியில் தாக்குதல் நடத்தியதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ள‌னர்.

காவல்துறையினருக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ், டெல்லி காவல்துறை விசாரணையை மேற்கொள்ளட்டும், அதே வேளையில், தான் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக உறுதிபட தெரிவித்தார்.